தெலுங்கில் வெளியாகும் ‘இந்தியன் 2’ டைட்டில் இதுதான்!

சென்னை : சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிறைவு விழாவில் கமல் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 21 வருடங்களுக்கு முன் வந்த ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் அமையும் ஷங்கரின் படங்களில் ‘இந்தியன் 2’-வும் அதே போல எடுக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் இக்காலத்தில் அரசியலில் நடக்கும் ஊழல் பற்றிய விஷயங்கள் இருக்குமாம்.

தமிழ், தெலுங்கில் இப்படம் எடுக்கப்படுவதோடு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என மற்ற மொழிகளும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு ‘பாரதியூடு 2’ என பெயர் வைத்திருக்கிறார்கள். 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தில் சேனாபதி கேரக்டரில் நடித்த கமல், ஊழலுக்கு எதிராகப் போராடி, ஊழல்வாதிகளை வதம் செய்வதோடு, லஞ்சம் வாங்கும் தனது மகன் சந்திர போஸையும் கொல்வார்.

21 வருடங்கள் கழித்து உருவாகவிருக்கும் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. தெலுங்கில் வெளியான ‘பாரதியூடு’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share Now